17.08.2019
அந்தமான் தமிழர் சங்க வளாகம், திருவள்ளுவர் அரங்கத்தில் மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை நிறுவனர் - தலைவர் திரு.மா.கருண் அவர்களின் சீரிய தலைமையில் இந்திய பேனாநண்பர் பேரவை - அறிமுக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
அந்தமான் தமிழர் சங்கம் செயலாளர் கோட்டை வே. காளிதாசன், பொருளாளர் ந. ஜெயராமன் இந்தியப் பேனாநண்பர் பேரவை பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி, புரவலர் ம. செல்வராஜ், திருமதி சுலபா கருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் வரவேற்புரையாற்றினார்.
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் துவக்கம், வளர்ச்சி, உலகளாவிய உறுப்பினர்கள், தமிழ்நாடு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பேரவைக்கிளைகள் பற்றியும், பேரவையின் சமூகநல செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துப் பேரவையை அறிமுகப்படுத்தினார்.
பேரவைச் செய்திகளை விரிவாகக் கேட்டறிந்த அந்தமான் தமிழர் சங்கம் தலைவர் லி. மூர்த்தி, அந்தமான் தமிழ் மன்றம் தலைவர் தி.நா. கிருஷ்ணமூர்த்தி இந்திய சுங்கத்துறை உதவி ஆணையர் (பணி நிறைவு) சௌ. தவமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக பேரவை நிர்வாகிகளுக்குப் பயனாடை அணிவித்து அன்பு பாராட்டினர்.
பேரவை சார்பாக அந்தமான் தமிழர் சங்க செயலாளர் கோட்டை வே காளிதாசன் அவர்களுக்கு நினைவுப்பரிசுடன் பொன்னாடை, தமிழர் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
பேரவை உறுப்பினர்களாக துவக்க காலத்தில் பேரவையில் இணைந்து நட்பு பாராட்டிய நண்பர்கள் மு. தென்னரசு, எஸ். சண்முகம், என். திருப்பதி ஆகியோர் சுனாமி அழிவுக்குப் பிறகு தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவை அறிமுக விழாச் செய்தியைக் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து தலைவரைச் சந்தித்து மகிழ்வு பாராட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் பேரவையின் முதலாம் நட்புச் சங்கம [25-26 மே 1996] சிறப்பு மலரை பேரவைத் தலைவருக்கு அளித்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தியது உணர்வுபூர்வமான அனுபவமாக அமைந்தது.
பேரவையின் அந்தமான் கிளை துவக்கவிழாவை விரைவில் சிறப்புடன நடத்துவது எனவும் அதிகபட்ச உறுப்பினர்கள் அதற்குள் இணைக்கப்படுவார்கள் எனவும் கோட்டை வே. காளிதாசன் அவர்கள் உறுதியளித்தார்.
விழா நிகழ்வுகளை தமிழாசிரியர் கார்த்திகைநாதன் சிறப்பாக நெறியாள்கை செய்தார்.
பேரவை நிர்வாகிகளுக்கு போர்ட்பிளேயர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்த அந்தமான் தொழிலதிபர் முனியாண்டி அவர்களுக்கும், விழா சிறக்க ஒத்துழைப்பு அளித்த அந்தமான் தமிழர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்ற அந்தமான் தமிழர்கள் , தாயகத்திலிருந்து வந்து விழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறி திருச்சி மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ஆ. கந்தன் உரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுடன் அந்தமான் தமிழர் சங்க நிர்வாகிகள் சோழன் மோ. சுதாகர், எஸ்.பி. காளைராஜன் {காரா}, மா. சேது, பா.இராமச்சந்திரன்,வே. குமார் அந்தமான் மாநில தி.மு.கழக இளைஞரணி அமைப்பாளர் வே. இரவிச்சந்திரன் இந்தியப் பேனாநண்பர் பேரவை திருச்சி மாவட்டக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன், குமரி பி. ராஜு மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை அந்தமான் தமிழர் சங்க செயலாளர் கோட்டை வே. காளிதாசன் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
===========================================================================================================================
[17.08.2019] நன்றிக்கடன்:
அந்தமானில் பேரவை அறிமுகவிழா நடைபெற்ற போது விழாவிலும், சுற்றுலாவிலும் பங்கேற்ற இந்திய சுங்கத்துறை உதவி ஆணையர் {பணிநிறைவு} திருமிகு சௌ. தவமணி அவர்களின் பின்னூட்டப் பதிவு.
இந்தியப் பேனாநண்பர் பேரவை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய 33 பேர் கொண்ட ஐந்து நாள் அந்தமான் பயணத்தை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் நிறைவேற்றித் தந்த இறைவனுக்கு நன்றி !
இந்தியப் பேனாநண்பர் பேரவை வருடா வருடம் நட்புச் சங்கமத்தின் போது மினி சுற்றுலாக்களை நடத்திவருவது யாவரும் அறிந்ததே. ஆயினும் இந்த அளவில் பெரியதொரு சுற்றுலா நிகழ்வாகவும், அந்தமான் தீவில் இந்தியப் பேனாநண்பர் பேரவையை அறிமுகப்படுத்தும் விழாவாகவும் நடத்த முன்வந்தது, பேரவைத் தலைமை தாம் எடுத்துக் கொண்டுள்ள எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்ற அதிலுள்ள சிரமங்களைத் துச்சமென ஒதுக்கி நிமிர்ந்து நிற்கும் உறுதிப்பாடே ஆகும்.
இது நிச்சயமாக பேரவையின் செயல்பாடுகளில் இன்னொரு மைல் கல்.
செல்லுலார் ஜெயிலையும் அதன் கண்ணீர் வரவழைக்கும் வரலாற்றையும் இங்கு வந்துதான் தெரிந்து கொண்டோம். இந்த ஜெயிலில் காலடி வைத்து சித்தம் கலங்கும் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்னர் மீண்டும் அங்கு வந்து ஒலி ஒளி காட்சியையும் கண்டும் கேட்டும் வியந்து நின்றோம் பேரவை நிகழ்த்தியுள்ள முதல் நெடுந்தூர சுற்றுலாவாகிய இது ஓர் இன்பச் சுற்றுலாவா? இல்லை, இல்லை, அதையும் தாண்டி இது ஓர் உணர்ச்சி பொங்கும் வினோதச் சுற்றுலா.
ஒரு காலத்தில் அனைத்து சிறைக்கூடங்களும் கைதிகள் என்ற பெயரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால் நிரப்பப்பட்டு, வெள்ளையர்களால் கொடுமையும் சித்திரவதையும் செய்யப்பட்டு, உணவு மறுப்பும், வீரர்கள் தங்கள் விடுதலை வேட்கையால் உண்ணாவிரதமும் கடைபிடித்து, தூக்குக்கயிற்றில் உயிர் விட்டோரும், சிறையிலேயே உயிர் விட்டோரும் ஆகிய சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி துன்பப்பட்டிருந்ததை அறிகிறோம். ஆயினும் நம் வீரர்கள் தளர்ந்துவிடவில்லை. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருந்தாலும், நாட்டின் விடுதலை என்ற ஒரே இலக்கிற்காக துன்பங்கள் அனைத்தையும் தாங்கி, ஓர் அறையிலிருந்து ஒரு வீரர் எழுப்பும் இன்குலாப் ஜிந்தாபாத்! பாரத் மாதா கீ ஜே! வந்தே மாதரம்! என்ற கோஷங்களுக்கு அனைத்து அறைகளிலிருந்தும் பதில் குரல் எழுப்பி வெள்ளையர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கச் செய்துள்ளனர் நம் வீரர்கள். இப்போது சுதந்திர இந்தியாவில் நாம் சென்று பார்க்கும்போது அறைகள் அனைத்தும் வெறுமையாக இருப்பதை அறிந்து நமக்கும் நெஞ்சின் கனம் குறைகிறது.
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்” என்பதின் பொருள் விளங்கப் பெற்றோம். இயற்கை எழிலின் உச்சத்தைப் பெற்றிருந்தாலும், இந்த தீவுகளைச் சூழ்ந்துள்ள கவின்மிகு கடல் நீர் “காலா பானி” என்றல்லவா அழைக்கப்பட்டு வந்திருந்துள்ளது. ஒரு காலத்தில் எதன் பொருட்டும் இத்தீவுகளுக்கு வந்து சேருவோர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு உயிரோடு திரும்பிச் செல்ல முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமலிருந்துள்ளது. கைதிகளாக வந்து சேர்ந்தவர்களுக்கும் அதே கதிதான், பிழைப்பு தேடி வருவோர்க்கும் அதே கதிதான். இத்தீவிற்கு அருகாமையில் வரும் கப்பல் ஏதேனும் உடைந்து மூழ்கிவிட்டால் உயிர் பிழைப்பதற்காக நீரில் நீந்தி இத்தீவில் ஒதுங்கினாலும் அதே கதிதான். துப்பாக்கி ஏந்தி தீவைக் காக்கும் வெள்ளையர்களிடமிருந்து தப்பித்தாலும், மனித இனமே தமக்கு எதிரி என்று வாழ்ந்துவந்த காட்டுவாசிகளின் ஈவிரக்கமற்ற ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் இரையாகவேண்டியதுதான். நீந்தி செல்லலாமென்றால் முதலைகள் விட்டுவைப்பதில்லை. இத்தீவிற்கு வந்தால் மனிதனாலும் கொடுமை, மனிதனல்லாதவற்றாலும் கொடுமை. ஆகவே தீவைச் சுற்றிலும் இருந்தது “துன்பக் கடல்” என்பதில் வியப்பென்ன?
சுதந்திரக் காற்றை சுவாசித்துவரும் நாம் இந்தத் துன்பங்களிலிருந்து மீண்டுவிட்டோம். இப்போது இத்தீவில் ஆபத்தென்பதெல்லாம் காட்டுமிராண்டி பழங்குடியினர் வாழும் சில பகுதிகள் மட்டுமே. அதற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டோம். சில பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்கச் செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டோம். கப்பலிலும் வானூர்தியிலும் தீவிற்கு வந்து செல்கிறோம்.
கடற்கரை அழகையும், மானையும், மயிலையும், பவளப் பாறைகளையும், பலவகைக் குயிலோசையையும் சுண்ணாம்புக் குகையையும், சூரியன் அடைவதையும், வானளாவிய பலவித மரங்களையும், தென்னை, பாக்கு மரங்களையும், அருங்காட்சியகங்களையும், கண்ணாடியிலான நீர்மூழ்கிக் கப்பலில் சென்று ஆழ்கடலின் அழகை ரசித்ததையும் இன்னும் இயற்கையின் மொத்த அழகையும் கண்டுகளித்த இத்தீவில் இங்கேயே வந்து தங்கிவிடலாமா என்று எண்ணத்தான் தோன்றியது.
உயிரோட்டமான இந்த இனிய, இதமான பயணத்திற்கு ஏற்பாடு செய்த இந்தியப் பேனாநண்பர் பேரவைக்கு ஏராளம் ஏராளம் நன்றி !
பேரவை நிறுவனர்-தலைவர் திரு. மா. கருண் அவர்களும், பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி அவர்களும் 33 பேரையும் ஒரே குடும்பமாக இணைத்து பயணம் முழுவதும் நடத்திச் சென்ற பாங்கு வியக்கத்தக்கது. சிறந்த நெறியாள்கை. ஐயா புலவர் தியாக சாந்தன் அவர்களும் புரவலர் ஐரோலி செல்வராஜ் அவர்களும் நம்மோடு பயணித்தது வெகுசிறப்பு.
பயணம் முழுவதும் ஒவ்வொருவரும் குடும்ப உறுப்பினர் போன்றே நடந்துகொண்டார்கள். ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பயண இயக்குனர் ஃப்ரெடிரிக் அவர்களும் தங்குமிடம் உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய வசதிகளை மிகச் சிறப்பாக செய்ததோடல்லாமல் கூடவே எல்லா இடத்திற்கும் வந்து பல இடங்களில் நமக்கு வழிகாட்டியாக பணியாற்றி நமது பேரவைக் குடும்ப உறுப்பினராகி நம்மோடு கலந்துவிட்டார். அவருக்கு நன்றி எத்தனை எத்தனை சொன்னாலும் தகும்.
சென்னையில் புறப்பாட்டின்போது அதிகாலை 3 மணிக்கு அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்த திருச்சி மாவட்ப் பேரவைக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன், அறங்காவலர் ஆ. கந்தன் அனைவர் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார்கள்.
பயணத்தின் முத்தாய்ப்பாக அந்தமான் தமிழர் சங்கத்தாரோடு இணைப்புப் பாலம் கட்டி இந்தியப் பேனாநண்பர் பேரவை அறிமுகவிழாவும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
எனது இந்த பதிவு இந்தியப் பேனாநண்பர் பேரவைக்கு நான் பட்ட நன்றிக்கடன். பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களுடன் நான் கொண்டிருந்த குடும்ப பாசத்தின் வெளிப்பாடு.
இது என் உணர்வு பூர்வமான பதிவு. இந்தியப் பேனாநண்பர் பேரவை என்ற பேரியக்கக் கோபுரத்திற்கு ஒரு மணிமகுடமாக இந்த அந்தமான் பயணத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒத்துழைத்த நல்ல உள்ளங்களுக்கு இதய அன்பு.
வாழ்க ! வளர்க ! இந்தியப் பேனாநண்பர் பேரவை.
சௌ. தவமணி, இந்திய சுங்கத்துறை உதவி ஆணையர் (பணிநிறைவு).