அன்பு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - மாரச் 2021
அன்பு தலைவருக்கு திறந்த மடல் வாழ்த்து
அன்புள்ள தலைவர் கருண் அவர்களுக்கு வணக்கம்.
தங்களுக்கு என் அன்பான பிறந்தநாள் மற்றும் நண்பர்கள்நாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். ஆண்டுதோறும் வயது கூடினாலும் அதை மூப்பு என்று அழைக்கமுடியாது. வயது ஏற ஏற தங்கள் அறிவு, ஆற்றல், அணுகுமுறை, அனுபவம் வரவேற்கத்தக்க மாற்றங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தங்கள் இதயப்பள்ளத்தில் பெருகியுள்ள நட்புமலர்களின் முகப்புள்ளிகளாக தென்படுகின்றன. ஆண்டுகள் கடந்தாலும் தங்களின் அன்பு, பாசம், பரிவு மாறாதிருப்பதோடு, அது எனக்கு எப்போதுமே பரிசாக வாய்த்திருப்பதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்.
1995-ஆம் ஆண்டில் என் இதய வாசலில் பளிச்சிட்ட கருண் எனும் அதே இன்முகம் இன்றைக்கு இதயக்குழியில் சிம்மாசமிட்டு அமர்ந்திருப்பதை உணர்கிறேன். தங்களை போன்ற நல்லமனங்கள் நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்ல, காலம் தோறும் மீண்டும் மீண்டும் மலர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் அன்பு, நட்பு, மனிதநேயம் தஞ்சம் அடைந்திருக்கும் தங்களை போன்ற இதயம், உலகத்தின் மூலை முடுக்கிலும், மாந்தரின் மூளைமுடுக்கிலும் பூத்துக்குலுங்க வேண்டும்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை என்ற ஆலவிதையை 1995-இல் நட்டது, இன்று 27-ஆம் ஆண்டில் மனிதமனங்களுக்கு தஞ்சம் நல்கும் ஆலமரமாக தழைத்து குலுங்குகிறது. உலகம் ஒருநாள் வியந்து வரலாற்றில் பதியும்...கருண் என்ற மாமனிதரின் உயரிய எண்ணங்களும், சிந்தனைகளும், தத்துவங்களும் அதை பரப்புரை செய்வதற்காக தொடங்கிய இந்தியப் பேனாநண்பர் பேரவையும் காலம் கடந்தும் தேவைப்படும் அருமருந்தென்று.
இயேசு கிறித்து தங்களுடைய சீடர்களை தேர்வு செய்துகொண்டிருக்கும்போது, கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுரு என்பவரை சந்திக்கிறார். "பேதுருவே! இதுவரை நீ மீன்பிடித்துக்கொண்டிருந்தாய், இனி மனிதர்களை தழுவுபவனாக மாற்றுவேன். என்னை பின் தொடர்ந்து வா!" என்று இயேசுகிறித்து பேதுருவுக்கு அழைப்புவிடுக்கிறார். அதைப்போல, நன்னெறிகள் சிதைந்து தறிக்கெட்டு தள்ளாடும் உலகமக்களின் மனங்களை அன்பு, நட்பு, மனிதநேய மருந்துகொண்டு நல்வழிப்படுத்தி, செம்மையான, அமைதியான, அன்பான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தூதுவர்களாக, மனிதம் வாழும் புனிதர்களாக வாழ எங்களை அழைத்த மனிதநேயமாமணியாம் நீவீர் பல்லாண்டு, எங்களை அன்பாலாண்டு வாழ வாழ்த்துகிறோம். உங்கள் சீரியப்பணியில் எங்களையும் இணைத்துக்கொண்டு உம்மை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறோம். நாளைய உலகம் நம்மை வியந்து பேசும், அதன்பெருமை உங்களையே சாரும்.
பெருமைக்குரிய தங்கள் நட்பை எப்போதும் இதயக்கூண்டில் பாதுகாத்து வைத்திருப்போம் என்ற உறுதிமொழியை வழங்கி, தங்களுக்கு தங்கள் தாய்மடியில் மலர்ந்த நன்னாள் மற்றும் நண்பர்கள் நாள் நல்வாழ்த்துகளை மீண்டும் மொழிந்து இன்புறுகிறேன்.
வாழ்க நீவீர் நன்னெறிகள் போற்ற!
வாழ்க நீவீர் மனிதநேயம் தழைக்க!
வாழ்க நீவீர் நட்புப்பூக்கள் செழிக்க!
வாழ்க நீவீர் அன்புவானம் பரந்துவிரிய!
இன்று போல என்றும் உங்களை நேசிக்கும்,
அன்புடன்,
ந.முத்துமணி,
பெங்களூரு.